காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் என்ற இடத்திற்கு அருகில் இத்தலம் உள்ளது. உத்திரமேரூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ள மானாம்பதி சென்று அங்கிருந்து விசூர் என்னும் கைகாட்டி பெயர்ப்பலகை பார்த்து இடப்புறமாகத் திரும்பி சுமார் 2 கி.மீ. செல்ல வேண்டும். தென்பாதி விசூர், விசூர், வடபாதி விசூர் என்று மூன்று ஊர்கள் தொடர்ந்து உள்ளதால் 'விசூர்' என்று தெளிவாக வழிகேட்டு செல்லவும்.
இக்கோயில் பலகாலம் அறியப்படாத தலமாகவே இருந்து வந்தது. வலையப்பேட்டை இரா. கிருஷ்ணன் அவர்களின் முயற்சியால் இத்தலம் அறியப்பட்டது. இக்கோயிலின் தலவரலாற்றின்படி அம்பிகை விசுவரூபம் எடுத்ததால் 'விசுவமாநகர்' என்னும் பெயர் பெற்றது. தற்போது 'விசூர்' என்று அழைக்கப்படுகிறது.
ஊரின் முன்புறம் உள்ள மாரியம்மன் கோயிலை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில். போதிய பராமரிப்பு இல்லை. இத்தலத்தில் மூலவராக உள்ள சிவபெருமான் அகத்தீஸ்வரர் என்னும் திருநாமத்துடனும், அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்னும் திருநாமத்துடனும் காட்சி தருகின்றனர். தினம் ஒருகால வழிபாடு மட்டுமே நடைபெறுகிறது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒருமுகமும், நான்கு கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். அவரது பின்புறம் மயில் உள்ளது. 9791345220 என்ற எண்ணில் கோயில் குருக்களைத் தொடர்புக் கொண்டு இத்தலத்திற்குச் சென்று தரிசனம் செய்யலாம். இக்கோயில் இந்துசமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
|